Sunday, May 13, 2012

கோடுகள்

ஆராதனா இரண்டு வயது குழந்தை. இரண்டாம் வயதிலேயே பெங்களூரின் ஒரு "டே கேர்" பள்ளியில் ( Play Group) பட்டம் பெற்று விட்டாள் 

பள்ளி ஆண்டு விழாவில் , பட்டமளிப்பு ஆடையில் மேடை ஏற மறுத்து அடம்பிடித்து அழுதபடியே என் மொபைல் கேமெராவில் பதிந்திருந்தாள்.

அவள் அழுகை ஏற்படுத்திய கேள்விகள் இங்கே ...,,,,

பள்ளிக்கு சேர்ந்த மறு நாளே , ஒரு பை , ஐந்து புத்தகம் , மூன்று நோட்டுகளோடு படிப்பின் சுமையை தன் தோளில் ஏற்றிவிட்டாள்.

மழலை மொழி கூட சரியாக பேச வராத வயது ..ஆங்கில ரைமஸ் பாடல்களை ஆசிரியர் சொல்ல சொல்ல அர்த்தம் தெரிந்தது போல தலை அசைக்கிறாள். ??
தமிழ் பேசும் ஆசிரியரோ , குழந்தைகள் யாரும் உடனில்லை...எந்த மொழியில் வகுப்பு உறவாடியிருப்பாள்.??  வண்ணங்களின் பெயர் தெரியாது அவளுக்கு ..மஞ்சள் நிறங்களை ஒட்டி வெட்டும் வீட்டுப் பாடத்தோடு வீட்டுக்கு வருகிறாள்..?? அவளுக்குப் பதிலாக நானும் என் மனைவியும் ஒட்டிய படங்களுக்கு ..பள்ளியில் அவள் "வெரி குட் " டூ ஸ்டார் " வாங்கி மறுநாள் வீடு வருகிறாள்..

சேர்த்து விட்ட சில நாட்களில் புதிதாய் வண்ணப் பென்சில்கள் வைத்து சுவரில் , காகிதங்களில் கிறுக்குவதற்கு பழகியிருந்தாள்.
வீடு காலி செய்யும் பொது , கொடுத்த அட்வான்ஸில் பெயின்ட் அடிக்க எப்படியும் ஐந்தாயிரம் ரூபாய் பிடித்துக்கொள்வான் வீட்டு ஓனர். அந்த அளவிற்கு சுவர் மொத்தமும் சித்திரம் செய்திருந்தாள்.

புத்தகத்தில் தரப்பட்ட எந்த பாடலின் அர்த்தமும் புரிந்ததாகத் தெரியவில்லை அவளுக்கு.  புத்தகத்தில் போட்டிருந்த எந்த கதை சொல்லும் நீதியையும் அவள் உணர்ந்ததாக அறியவில்லை. 

"காகம் ஏன் கல்லை போட்டது ????? - என்பதன் பொருள் உணரும் வளர்ச்சியோ பக்குவமோ இல்லை. ஆனால்... காகம் , ஆமை முயல் போட்டி ஆகிய உள்ளடக்கிய எல்லாப் புத்தகத்தையும் தனி தனிப் பக்கங்களாக கிழித்து வைத்திருப்பாள். பாலீதின் டேப் போட்டு ஒட்ட ஒட்ட மீண்டும் கிழித்துவைப்பாள். புத்தகம் , நோட்டு எதனிலும் ஒரு  வெற்று  பக்கத்தையும்  அவள் ஓவியங்கள் விட்டுவைக்கவில்லை.

இந்த நாட்களில்  அவள் வரைந்தது , கிறுக்கியது அனைத்துமே கோடுகள் மட்டுமே . அவள் ஆரம்பித்த எந்த கோடுகளும் வளையவே இல்லை சுவரின் மேல். ஒரே இடத்தில் கொய்யேன பல கோடுகளை போட்டு , வண்ணங்களை குலைத்தது போல் இருந்தது அவளின் ஓவியங்கள்.

அவ்வப் பொது ஊருக்குச் செல்லும் பொது ..ஆராதனாவின் ஓவியத்தின் ஒரு கோடு , தமிழகத்து அங்கன்வாடிக்கும் , ஆராதனாவின் "டே கேர்" கும் இடையிலான தூரத்தை அளக்கும் அளவுகோலாக என் கண் முன் விரிகிறது.

சில தினங்களாக ஆராதனா வரையும் கோடுகளில் சில வளைந்திருப்பதை  பார்க்கிறேன் . இன்னும் சில தினங்களில் ஆராதனா அடுத்த ஆண்டு " ப்ரீ ஸ்க்கூல் " சேர இருக்கிறாள்.