Sunday, August 5, 2012

கனவு , கனவுகள்

அனகோண்டா பாம்பு என்னை விடாமல் துரத்த நான் ஓடிக் கொண்டிருந்தேன். அதன் கூறிய பற்களில் பிடிபட்டு சிக்கித் தவித்து இறுதியில் நான் சாகவில்லை. ஒரு நாள் , பழைய ஜேம்சு பாண்டு போல ஆல்ப்ஸ் மலையின் உயரத்தில் இருந்து கீழ் நோக்கி பனிச்சருக்கிக் கொண்டிருந்தேன். அனகொண்டாவையோ ஆல்ப்ஸ் மலையையோ நேரில் பார்த்திராத நான் கூறுவது நான் கண்ட கனவுகளைத் தான். கனவுகள் என்பது என்ன ? கனவுகள் ஏன் வருகின்றது ??

கனவுகளுக்கு அறிவியல் பூர்வமான வரையறை தரப்படவில்லை. ஆழ்மனதின் எண்ணங்களே கனவாக வரும். கனவு இல்லாத உறக்கமே நிம்மதியானது என்றே வைத்துக் கொள்வோம். கனவுகள் இல்லையெனில் மனிதனின் ஒரு நாளின் பாதிப் பொழுது எத்துனை வெறுமையாகிப் போய்விடும். ?? 

கனவுகள் இல்லாத இரவுகளை நான் வரவேற்பதில்லை. நான் நீங்கள் மாடுமல்ல இந்த உலகமே கனவுகள் காண்கிறது. தாயின் வயிற்றில் கருவில் வளரும் குழந்தை கூட கனவு காண்கிறது என்கிறது ஓர் மருத்தவ ஆய்வு . ஒவ்வொரு மனிதனையும் ஏதாவது ஒரு கனவு ஒரு பொழுதில் கதாநாயகர்கள் ஆக்கிச் செல்கிறது. ஒரு பக்கம்  பயப்பட வைக்கும் , அழுகையே வரவைக்கும் கொடூர கனவுகளும் உண்டு. எல்லோரும் நாம் கண்ட தீய கனவுகளை மறந்து விடுகிறோம். அல்லது மறக்க முயற்சிக்கிறோம். அங்கே கனவுகள் நம்மைப் பண்படுத்திகிறது. 

இந்த நூற்றாண்டின் அதிகமாக வந்து போன கனவுகள் பள்ளி , கல்லூரி நாட்களாகவே இருக்கும். பள்ளிக்கூட வகுப்பறை , கூடப் படித்த ஒரு சில மாணவர்கள் , ஆசிரியர் இவர்கள் இன்னமும் என் கனவுகளில் வாடிக்கையாகப் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் கூட ஒரு கனவில்,  சுனாமியில் இருந்து இவர்களை தசாவதாரம் கமலஹாசன் போல காப்பாற்றிக் கொண்டிருந்தேன். 

இரவு  தூங்கும் முன் , கடவுகளைக் கும்பிட்டுப்  படுத்தால்  கனவே  வராது  என்று சொல்லுவாள்  அம்மா. நானோ, நேர்மறையான ஒரு சுவாரஸ்யமான கனவிற்காகப் பிரார்த்திக்கிறேன். குயில் கனவில் வந்து,  தான் குயிலியாகப் பிறந்த கதை சொன்னதாகப் பாரதி "குயில் பாட்டு" பாடினான். கற்பனையாளர்களை கனவு துரத்திக் கொண்டே இருக்கிறது. நம் வாழ்வின் உயரத்தை , பிறரின் துயரத்தை மாற்றக் கூடிய ஒரு கனவு என்றாவது ஒரு நாள் வரக் கூடும். அது ஓர் அதிகாலைப் பொழுதாக இருக்கக் கூடும். !!!

No comments:

Post a Comment